ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
இக்கூட்டமானது எதிர்வரும் 22 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என முன்னதாகஅறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையிலேயே ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தை 21 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடத்தும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார் எனவும், ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே இதன்போது முழுமையாக கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடந்தமுறை நடைபெற்ற ஆளுங்கட்சிகுழுக்கூட்டத்தில் ’20’ தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டனர். இதனையடுத்து 20 ஐ மீளாய்வு செய்வதற்கு பிரதமர் குழுவொன்றை அமைத்தார். ’20’ திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ’20’ தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது அதில் மாற்றங்களை ஏற்படுத்தவதெனவும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் 20 இற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனாதிபதி ஆளுங்கட்சி எம்.பிக்களை அழைத்துள்ளமை தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
