அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் படுபயங்கரமானதாகும். ’20’ நிறைவேறியதும் ஜனநாயகத்துக்கும் முடிவு கட்டப்பட்டுவிடும் – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஶ்ரீதாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 61 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (26) அத்தனகலவிலுள்ள அன்னாரின் சமாதியில் நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் நிமல்சிறிபாலடி சில்வா,முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நினைவுதின நிகழ்வு முடிவடைந்த பின்னர் ’20’தொடர்பில் சந்திரிக்கா அம்மையாரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
” 20ஆவது திருத்தச்சட்டமூலம் படுபயங்கரமானதாகும். ஜனநாயகம் முடிந்துவிடும். அது குறித்து விரைவில் அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளேன்.” – என்றார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பது குடும்ப சொத்து கிடையாது, அது மக்களுக்கான கட்சியாகும். எனவே, அதனை ஆக்கிரமித்து வைக்கும் எண்ணம் எமக்கு இருக்கவில்லை. அதனால்தான் புதிய தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் கட்சியை இன்று சின்னபின்னமாக்கிவிட்டனர் எனவும் குறிப்பிட்டார்.
