மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு

களுத்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பேருவளை – மக்கொன – ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்திப் பகுதியில் மகொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்று பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஹல்கந்தவில அணைக்கட்டுச் சந்தியில் வசிக்கும் அனகியத்தயியகே நந்தாவதி (வயது 70) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இன்று காலை அருகில் உள்ள சந்தைக்கு வந்து வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணைக் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பயாகல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரான அம்பாந்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles