இலங்கையில் ஆதிவாசிகளை விட மிக மோசமான நிலையில் வாழும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனியான செயலணி ஒன்றை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.
மலையக மக்களின் மனநிலையையும் அவர்களது கஷ்டங்களையும் ஜனாதிபதி ரணில் நன்குணர்ந்தவர். ஒவ்வொரு தடவையும் அவர்களின் பெரும்பாலான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன.
அந்த வகையில் அவர்களின் நலன்கள் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அதற்காக ஒரு ஜனாதிபதி செயலணியை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
” ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தால் அதில் ஒருவர் மட்டும் நலிவடைந்து இருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அவ்வாறு தான் இலங்கையில் மலையக மக்களும் உள்ளனர். நாட்டில் ஆதிவாசிகள் கூட சிறப்பாக வாழ்கின்றனர். அதைவிட மோசமான நிலையிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகளைப்பெற்று மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் மலையக மக்கள் நலன்களை கவனிப்பதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது போல அது தற்போது இல்லாமலே போய்விட்டது.
அரசாங்கத்தின் சார்பில் ஒரு நிறுவனம் அங்கு இயங்கினாலும் அது கம்பனிகளின் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே பணி செய்கின்றது என்றும் அவர் சபையில் மேலும் தெரிவித்தார்.
