புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்டவரைவு நகல் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு 20 ஆவது திருத்தச்சட்டமூலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் செய்யப்படும்.
சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைபலம் அரசு வசம் இருந்தாலும் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பைகருதி, குறுகிய அரசியல் நோக்கங்களைக்கைவிட்டு அதற்கு எதிரணி உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்.
20ஆவது திருத்தச்சட்டமூலம் என்பது தற்காலிக ஏற்பாடு மாத்திரமே புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும் என்ற உறுதிமொழி நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் 6 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதற்காக 9 பேரடங்கிய நிபுணர்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
6 மாதங்களில் புதிய அரசியலமைப்பு இயற்றப்படாது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே 6 மாதங்களில் அடிப்படைவரைவு நகல் முன்வைக்கப்படும்.”- என்றார்.
