அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட டொரிங்டன், ஸ்டார், எல்பெத்த ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் இன்று (12) காலை பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த (05)ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுறை தோட்டத்திற்கு உரம் மூடைகளை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உரம் மூடைக்குள் சிக்குண்டு விபத்துக்குள்ளான தொழிலாளர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்குபிள்ளை கந்தையா (வயது 47) நேற்று (11) காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த தொழிலாளிக்கு சவப்பெட்டி செலவு மற்றும் மரணச் சடங்கு செலவு மாத்திரம் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் தொழில் நிமிர்த்தம் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர் மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் இதற்கான நீதி கிடைக்கும் வரை தாம் பணிக்கு செல்லப்போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
