நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிக அபாயத்தைக் கொண்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுவதாகவும், இவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் சபைக்கு அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் நேற்றைய (13) வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்து உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், அதிக அபாயத்தைக் கொண்ட வீடுகள் மாத்தளையில் 1,279 ஆகவும், 2,089 வீடுகள் நுவரெலியாவிலும், கண்டியில் 2,001 வீடுகளும்காணப்படுகின்றன என்றார்.
மேற்படி வீடுகளில் வாழ்வோரை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அதிக ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்த வேண்டுமென தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
பதுளை, நுவரெலியா, காலி,மொனராகலை, கண்டி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள கட்டட நிர்மாணப் பொருள்களுக்கு அமைய போதுமானதல்ல எனவும் தெரிவித்தார்.










