‘தலைவர் மனோ தலைநகரில் பெருவெற்றி பெற வேண்டும்’ -திகா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஒரு “தட்டிகேட்கும் தமிழன்”. கொழும்பில் அவரது வெற்றி, முழு நாட்டிலும் வாழும் தமிழர்களின் வெற்றி. தலைநகரில் வாழும் தமிழர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து, தமது முதலாவது விருப்பு வாக்கை தலைவர் மனோ கணேசசனுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலிய மாவட்ட வேட்பாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டணியின் தேர்தல் செயற்பாட்டாளர்களுக்கான அறிவுறுத்தல் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் திகம்பரம் கூறியதாவது,

நாம் எமது அரசாங்கத்தை சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்க பாடுபடுகிறோம். ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித் என்று அந்த அரசாங்கம் அமையும். கடந்த நவம்பரில் இந்த ஜனாதிபதிக்கு வாக்களித்த சுமார் 69 இலட்சம் வாக்காளர்களில் பெரும்பான்மையினர் இன்று மனம் நொந்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சி அடையும் அதேவேளை எங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் நாம் எமது அரசாங்கத்தை அமைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அமைவது எமது அரசாங்கமோ அல்லது ஒருவேளை இந்த அரசாங்கம்தான் நீடிக்க போகின்றதோ, எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாம் எமது உரிமைகளை தட்டிக்கேட்டே பெற வேண்டியுள்ளது. கடந்த எமது நல்லாட்சி அரசாங்கத்துக்குள்ளும் நாம் எமது உரிமைகளை தட்டிக்கேட்டே பெற்றோம். இதில் எமது கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் பங்கு பாரியது.

ஆகவே எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் வெற்றி, காலத்தின் கட்டாயம் ஆகும். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். அது கொழும்பு மாவட்டத்துக்கு மட்டுமல்ல, மலைநாட்டுக்கும், வடக்கு, கிழக்குக்கும் அவசியம்.

எனவே அவரது வெற்றி பெருவெற்றியாக அமைய வேண்டும். இதை எமது கொழும்பு மாவட்ட தேர்தல் செயற்பாட்டாளர்கள் மனதில் கொண்டு பணி செய்ய வேண்டும். எமது கொழும்பு மாவட்ட வாக்காளர்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். “தட்டிகேட்கும் தமிழனின்”, பெருவெற்றி முழு நாட்டையும் உலுக்க வேண்டும்.

Related Articles

Latest Articles