எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என சிலர் கருதுகின்றனர் என்று உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” தேர்தலை பிற்போடுவதற்கு அரச அச்சக அதிகாரி மீது சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர். ஏனையோர் திறைசேரி செயலாளரைக் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களும் உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. அவர்கள் சுற்றறிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் அமைச்சரின் உத்தரவுகளின்படி செயல்படுவதற்கு சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள்.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியளவில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையில், உள்ளாட்சி தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைப்பதாக சிலர் கூறுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கம் செலுத்தும். எனவேதான் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த முற்படுகின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை வேறு எந்த வாக்கெடுப்பையும் நடத்துவது மோசமானது என ஜனாதிபதி நினைக்கிறார். ” – என்றார்.
