பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரச அதிகாரிகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்படை இடைநிறுத்துமாறு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன விடுத்திருந்த சுற்றரிக்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சரவை எடுத்த முடிவின் பிரகாரமே இந்த அறிவிப்பு வெளியானது எனவும் கூறப்பட்டது.
பின்னர் அமைச்சரவை அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. சுற்றரிக்கையும் மீளப்பெறப்பட்டது.
எனவே, தேர்தலை குழப்புவதற்கு தனது செயலாளரை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக செயற்படும் பிரதமருக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கலந்துரையாடிவருகின்றார் என தெரியவருகின்றது.
