நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) டி20 தொடர் வரும் ஜூலை 31 தொடக்கம் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் மூன்று சர்வதேச மைதானங்களில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளன. லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணியும் தலா 20 வீரர்கள் கொண்ட குழாத்தினை கொண்டிருக்க முடியும் என்பதோடு, ஒவ்வொரு அணிக்கும் ஆறு வெளிநாட்டு வீரர்களை தமது குழாத்தினுள் உள்ளடக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடரின் நடப்புச் சம்பியன்களாக திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி உள்ளது.
எனினும் முந்தைய மூன்று எல்.பி.எல் தொடர்களும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்டபோதும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு பிற்போடப்பட்டிருந்தன. 2020, 2021 இல் நடந்த முதல் இரு தொடர்களும் கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்டதோடு கடந்த ஆண்டு தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக பிற்போனது.
