ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வு மே மாதம் முதலாம் திகதி காலை 09.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் நாட்டை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் ‘2048 ஜெயகமு’ (2048 வெற்றிகொள்வோம்) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு மே தினத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோர் அடங்கிய தலைமைத்துவ சபையின் தலைமையில் எதிர்வரும் மே மாதம் மாநாடு நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சி மேதின கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவை ஜனாதிபதி எடுத்திருந்தார். எனவே, அவரின் மே தின வாழ்த்து செய்தி மட்டுமே இடம்பெறும் என தெரியவருகின்றது.