சூடான் மோதலால் பல்லாயிரம் மக்கள் சவூதியில் அடைக்கலம்

சூடானில் போட்டி இராணுவத்திற்கு இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவை அடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சூடான் துறைமுகத்தில் இருந்து செங்கடலைக் கடந்து சுமார் 1900 பேரை ஏற்றிய கப்பல் ஒன்று ஜித்தாவில் உள்ள சவூதி கடற்படை தளத்தை அடைந்துள்ளது. இதில் போரில் தப்பிய 65 ஈரான் நாட்டு பிரஜைகளும் உள்ளனர்.

முன்னதாக சீனர்கள், பாகிஸ்தானியர்கள் சுமார் 500 பேரைச் சீன இராணுவக் கப்பல் ஒன்று ஜித்தாவிற்கு ஏற்றிச்சென்றது. அந்தப் பயணம் சுமார் 12 மணி நேரம் நீடித்தது. 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜித்தாவுக்குப் போயிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அபாயத்தைப் பொருட்படுத்தாமல் பல்லாயிரம் பேர் சூடானிலிருந்து வெளியேறவோ அந்த நாட்டின் மற்ற பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவோ முயல்கின்றனர்.

சூடான் தலைநகர் கார்டூமின் இராணுவத் தலைமையகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடந்த சனிக்கிழமையும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சூடான் இராணுவம் மற்றும் பலம்மிக்க துணைப்படைக்கு இடையே கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி வெடித்த இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 4,599 பேர் காயமடைந்திருப்பதாக சூடான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles