இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறாவது அணியாக நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த வாய்ப்பு மூலம் முதல் முறையாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நேபாளம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ளது. இந்தத் தொடரினை நடத்தும் உரிமையினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டுள்ளது.
ஆறு அணிகள் பங்குபெறும் இந்தத் தொடருக்கு ஐ.சி.சியின் முழு அங்கத்துவத்தினை கொண்டிருக்கும் நாடுகளான தொடரின் நடப்புச் சம்பியன் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடித் தகுதி பெற்றன.
இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய அணியினை தெரிவு செய்வதற்காக ஆசிய கிரிக்கெட் கெளன்சில், தகுதிகாண் போட்டியை நடத்தியது. ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வந்த இந்த தகுதிகாண் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு, தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாள அணிகள் தெரிவாகின.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (01) காத்மண்டுவில் ஆரம்பமான இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்றைய தினத்திலும் தொடர்ந்தது. இதில் நேபாள அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.
இதன்படி ஆசியக் கிண்ணத்தில் நேபாள அணி ஏ குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளதோடு, இந்தத் தொடரின் பி குழுவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன.
எனினும், போட்டி நடைபெறும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படாததால், போட்டிகளின் சரியான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
