பல வருடங்களாக இளம் பிக்குமார் மூவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாவலப்பிட்டி பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டிய நீதி மன்ற மேலதிக நீதவான் ஹர்ஷனி முனசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே குறித்த விகாராதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விகாராதிபதியை சனிக்கிழமை மாலை நீதவான் முன் நிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய பொழுதே மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததோடுபாதிக்கப்பட்டதாக கூறப்படும் மூன்று பிக்குமாரை மட்டுமின்றி விகாரையில் இருக்கும் ஏனைய இளம் (சிறுவர்) பிக்குமாரையும் நாவலப்பிட்டி வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையினை நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதவானின் உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பளை நிருபர்
