” இவ்வருடத்துக்குள் ஏதேனுமொரு தேர்தல் நடைபெறுவது உறுதி. அத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிநடைபோடும்.” – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” மக்கள் போராட்டத்தின்போது அதனை பயன்படுத்தி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அழிப்பதற்கு பயங்கரவாத அரசியலில் ஈடுபட்டுள்ள சிலர் முற்பட்டனர். அரசியல் பிரமுகர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட கொல்லப்பட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலுடன் மொட்டு கட்சி தற்போது மீண்டெழுந்துள்ளது. அடுத்து எந்த தேர்தல் நடந்தாலும் அதில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.” – எனவும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டார்.










