உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது:
” உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.
100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.










