ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

ஹட்டன் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் அவசரமாக மூடப்பட்டுள்ளன. தற்போது ஹகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை ஹட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்த ஹட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரி யொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. இது குறித்தான தகவல் இன்று காலை வெளியானது, இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இன்று (25.10.2020) நகரத்திற்கு வருகை தந்த மக்கள் விடயம் அறிந்து பதற்றத்திற்குள்ளாகினர். அதேநேரத்தில் திடீரென கடைகள் மூடப்படும், ஹட்டன் நகரம் முடக்கப்படும் என்ற அச்சத்தால் மக்கள், பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்ததை காணக்கூடியதாக இருந்தது.

அதேநேரம் மக்களின் நலன் கருதி ஹட்டன் டிக்கோயா நகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறிது நேரம் கடை வியாபாரங்களை முன்னெடுக்க வாய்ப்பினை அளித்தது. இதன்போது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விரைவாக நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.

ஹட்டன் பொலிஸாரின் ஊடாக நகர சபையும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது நகரத்தின் அனைத்து கடைகளையும் மூட வேணடும் என அறிவித்ததையடுத்து அட்டன் நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடினர்.

இதனை தொடர்ந்து அட்டன் நகர சபை ஊடாக அட்டன் நகரத்தில் குறித்த மீன் கடை பகுதிகளுக்கும், நகரத்தின் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகரம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles