” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களை பகிர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காலியில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மகா சங்கத்தினர் முன்னிலையில் சஜித் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான எமது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. ஒற்றையாட்சிக்குள், 13 ஐ அடிப்படையாககொண்டு அதிகாரப்பகிர்வு இடம்பெறும். மக்களின் இறைமை பாதுகாக்கப்படும்.
அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை காக்கப்படும் என்பதுடன், ஏனைய மதங்களுக்குரிய உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும், கௌரவமாக வாழக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் இருந்தால்தான் தேசிய பாதுகாப்பு பலமாக இருக்கும்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.










