பதுளை, பசறை – டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்துவந்த பணி புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரு நாட்களாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை , டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்டத்திற்கு மாற்றினால் தாங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டி வரும் எனவும் இதனால் தாங்கள் பல அசௌசரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் தோட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை தேசிய தோட்ட தொழிலார் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தோட்ட நிர்வாகத்துடன் இன்று பேச்சு நடத்தினர்.
இதன்போது தொழிலாளர்களின் கோரிக்கையை தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ராமு தனராஜா










