மாத்தளை, ரத்வத்தை – கீழ்ப்பிரிவு தோட்டத்தில் உதவி முகாமையாளர் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேலுகுமார், இத்தகைய தோட்ட முகாமையாளர்களை அரசு புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கண்டியிலுள்ள தமது அலுவலகத்தில் சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடத்திய சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் அடக்கி ஆளப்பட்டே வருகின்றனர். அம்மக்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களால் பல அடக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டுவருகின்றன. அவற்றின் ஒரு அங்கமே ரத்வத்தை கீழ்பிரிவு தோட்டத்தில் அரங்கேறியுள்ள அராஜகாகும்.
இதனை சாதாரணதொரு சம்பவமாக கருதிவிட்டு – கடந்து செல்ல முடியாது. அதுவும் அரச பெருந்தோட்ட நிறுவனமொன்றில் இப்படியானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை படு பயங்கரமாகும். எனவே, சமாளிப்புக்காக அந்த உதவி முகாமையாளரையும், அவருடன் வந்த அடியாட்களையும் கடடையில் இருந்து இடை நீக்கம் செய்வது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது. உரிய வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் அந்த உதவி முகாமையாளரும், அவரின் அடியாட்களும் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை சட்டரீதியாக அன்றி மனிதாபிமானத்துடன்தான் அணுக வேண்டும். அங்குள்ள நிர்வாகங்கள் பேரரசுகள்போல் செயற்படுகின்றன. தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தவே முற்படுகின்றன. இதற்கு இனியும் இடமளிக்க முடியாது. இந்நிலைமை நீடித்தால் எமது மக்களுக்கும் பொறுமையை இழக்க வேண்டிய நிலையே ஏற்படும். அவ்வாறானதொரு நிலைமையையா இந்த அரசு எதிர்பார்க்கின்றது?
எனவே, பெருந்தோட்டங்களை, தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குங்கள். அதற்குரிய நடவடிக்கையை மாத்தளையில் இருந்தே ஆரம்பியுங்கள். ” – என்றார்.










