மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று எதிரணியில் உள்ள மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கூட்டாக வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரும் ஆதரவு தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய வடிவேல் சுரேஷ் எம்.பி.,
” மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் அப்பாவி தொழிலாளியின் தற்காலிக குடியிருப்பை அடித்து நொறுக்கிய தோட்ட முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்.” – என வலியுறுத்தினார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணனும் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
அதேவேளை, ” சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டுள்ள தோட்ட முகாமையாளரை கைது செய்வதில் ஏன் தயக்கம், அவர் உடன் கைது செய்யப்பட வேண்டும்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் வலியுறுத்தினர்.
இவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ” பணி நீக்கம் என்பது தீர்வு அல்ல, தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
