உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். எனவே, சர்வதேச கண்காணிப்புடன் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல மர்மங்கள் உள்ளன. விசாரணைகள் தொடர்பிலும் சர்ச்சைகள் உள்ளன. புலனாய்வு பிரிவு செயற்பட்டுள்ள விதம் குறித்தும் சந்தேகம் உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமெனில் உண்மை கண்டறியப்பட வேண்டும்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை அமைத்து காலத்தை இழுத்தடிக்ககூடாது. சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. ஆகவே, மேற்படி தாக்குதல் சம்பவத்தின் பின்புலம் கண்டறியப்பட வேண்டும். அதற்குதான் நாம் தயாராக வேண்டும்.” – என்றும் ஹக்கீரம் குறிப்பிட்டார்.










