ரணில் ‘ராஜபக்ச ஆகிவிட்டார்’ – கூட்டமைப்பு எம்.பி. கடும் விளாசல்!

ராஜபக்சக்களைபோல சிங்கள பௌத்த வாக்குகளை இலக்கு வைத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது செயற்பட்டுவருகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைக்கூட விமர்சிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நீதிபதி சரவணராஜா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விடயம் தொடர்பில் நீங்கள் (அரச தரப்பு) ஒவ்வொரு காரணத்தை கூறலாம், ஆனால் அவர் அச்சுறுத்தலுக்கு, கொலை மிரட்டல்களுக்கு, அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துவிட்டுதான் அவர் சென்றுள்ளார். நீதிபதிகளுக்கே இந்நிலைமை என்றால் சட்ட ஆட்சியின் நிலை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

குருந்தூர் மலை வழக்குதான் அவரின் கடைசி விசாரணையாக இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். அதில் என்னையும் பிரதிவாதியாக பெயரிட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், தமிழ் மக்கள்தான் தீர்வுக்காக வீதியில் இறங்கி போராடிவந்தனர். இன்று சட்டத்தரணிகளும் வீதிக்கு இறங்கி போராடுகின்றனர். முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (நேற்று) ஐந்தாவது நாளாக மூடப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சு நடத்த இந்த அரசு தயாரில்லை. பேச்சு நடத்தி தீர்வை வழங்க அரசு ஏன் தயக்கம் காட்டுகின்றது? மூலைமுடுக்கெல்லாம் போராட்டம் இடம்பெறுவதையா அரசு எதிர்பார்க்கின்றது?

அதேவேளை, ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துகள், சிங்கள மக்கள் மத்தியில் அனுதாப ஓட்டுகளை இலக்கு வைத்ததாகும்.

ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மையின மக்கள் வேறு கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். ஆனால் அவரும் ராஜபக்சக்களின் வழியில்தான் பயணிக்கின்றார். சிறுபான்மையின மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற தொனியில் செயற்பட்டு, சிங்கள வாக்குகளை குறிவைக்கின்றார். ” – என்றார்.

Related Articles

Latest Articles