நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (5) வியாழக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் திருடனின் வருகையும் கொள்ளை அடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர், சிசிரிவி கமராவில் குறிப்பிட்ட சில காட்சிகள் கொண்டு அவற்றை பரிசீலனை செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதற்கு முன்னரும், குறித்த ஆலயத்தில் மூன்று முறைகள் சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி மணி, தங்க ஆபரணங்கள், ஆலய ஒலிபெருக்கி , உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியல், காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தடயங்களை சேகரித்து ஆலயத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவான காட்சிகளை உதவியாக கொண்டும் நுவரெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நானுஓயா நிருபர்










