வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி… மறைந்து நின்று வாகனங்களை பிடிக்க பொலிஸாருக்கு தடை

போக்குவரத்து குற்றங்களை கண்டறிவதற்காக, பொலிஸ் அதிகாரிகள் புதர்களுக்குப் பின்னாலோ ஆள் நடமாட்டமற்ற இடங்களிலோ மறைந்து நின்று வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகனமொன்றை நிறுத்த வேண்டியிருந்தால், ஏனைய வீதிப் பயனர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாகத் தெரியும் இடத்தில், வெளிப்படையான முறையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பஸ் தரிப்பிடம் அல்லது பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் பொருத்தமான இடங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ளலாம். தேவையான சந்தர்ப்பங்களில் வாகனத்தை பின்தொடரவும் முடியும். ஆனால், பொலிஸாரின் அடையாளமும் வாகனத்தை நிறுத்துவதற்கான நோக்கமும் தெளிவாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, காரணமின்றி வாகனங்களை நிறுத்துவது அல்லது சாரதிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக சந்தேகம் ஏற்படும் வகையில் போக்குவரத்து சோதனைகளை மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இதற்கான நடைமுறைகளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், போக்குவரத்து குற்றத்திற்கான அபராதப் பணத்தை பொலிஸ் அதிகாரியிடம் நேரடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சாரதிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில், தபால் அலுவலகம் உள்ளிட்ட சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் ஊடாகவே அபராதத்தை செலுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நடைமுறைக்கு வெளியே வீதியோரத்தில் பொலிஸாரிடம் பணம் வழங்குவது இலஞ்சம் அல்லது வேறு குற்றமாகக் கருதப்படக்கூடும் என்றும், பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் கோரவோ பெற்றுக்கொள்ளவோ உரிமையில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.

தம்புள்ளை நெடுஞ்சாலைப் பிரிவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்றதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி போக்குவரத்துக் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டு வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் மேலதிக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் எந்தவித சகிப்புத்தன்மையும் கடைப்பிடிக்கப்படமாட்டாது என்றும், தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான திணைக்கள மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles