மலையக சமூகத்தின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ‘இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை’ (CEWET) கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் விழாவை ஆகஸ்ட் 10, 2026 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் நடத்தியது.
அறக்கட்டளை நாட்டிற்கு வழங்கி வரும் 79 ஆண்டுகால சேவையைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, துணை உயர்ஸ்தானிகர், CEWET நிர்வாகக் குழு உறுப்பினர்கள், புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர்.
அதிகரிக்கப்பட்ட நிதி மற்றும் பயன்பெறும் மாணவர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட CEWET திட்ட கட்டமைப்பு இந்த நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்காக, இந்திய அரசாங்கம் CEWET நிதியத்திற்கு கூடுதலாக 200 மில்லியன் இந்திய ரூபாயை ஒரே தவணையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 350 இலிருந்து 700 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை
மலையகத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு நிதி ஆதரவை வழங்கும் வகையில் மாதாந்திரப் புலமைப்பரிசில் தொகையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கபொத உயர்தர (A/L) மாணவர்கள்: மாதம் ரூ. 2,500
பல்கலைக்கழக மாணவர்கள்: மாதம் ரூ.7,500
இந்திய உயர்ஸ்தானிகரின் உரை
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்திய வம்சாவளித் தமிழ் (IOT) சமூகம் இரு நாடுகளுக்கும் இடையிலான வாழும் பாலமாக விளங்குவதாகவும் குறிப்பிட்டர்.
“அறிவு என்பது அழிக்க முடியாத சொத்து” எனச் சுட்டிக்காட்டிய அவர், 75 கோடி இந்திய ரூபாய் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவால் வழங்கப்படும் விரிவான கல்வி ஆதரவுகள் குறித்து விவரித்தார்.
இதில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான STEM பயிற்சிகள் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் 9 மலையகப் பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாடுகள் 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.










