” இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பத் தயாராகவுள்ளோம்.”
– இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“உடனடியாகக் கடிதத்தை அனுப்பு வதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாங்கள் மீளவும் கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம். இன்று சில கட்சித் தலைவர்கள் வருகை தராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்குக் காணப்படுகின்றது. தற்போது நாட்டின் நிலை குறித்தும், தமிழ் மக்களது நிலை குறித்தும், 13 ஐஅமுல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமருடன் பேச நாம்விருப்பமாக இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.
ஆர்.எல்.எவ்., ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய
கட்சிகள் இணைந்து இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம். கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கின்ற போதுதான் இது முழுமையான செயல் வடிவம் பெறும்.” – என்றார்.
