கடும் மழையால் சாமிமலையில் பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்தது வெள்ளம் – மக்களும் இடம்பெயர்வு!

மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்டத்தின் 10 ஆம் இலக்க பிரிவில் உள்ள விநாயகர் ஆலய வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அத்துடன், குடியிருப்பு பகுதிகளுக்கும் வெள்ளநீர் வந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சாமிமலை பகுதியில் நேற்று மாலை பெய்த கன மழையால் மீட்டியா கோட்டை வன பகுதியில் உள்ள காட்டாறு பெருக்கெடுத்துள்ளது. இதனையடுத்தே மாலை 6 மணியளவில் சாமிமலை பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக அங்கு குடி இருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இன்று காலைவேளையில் வெள்ளம் குறைந்தால் , இடம்பெயர்ந்தவர்கள் தமது குடியிருப்புகளுக்கு வந்து உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles