இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும் எனவும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு கருத்துகளை முன்வைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன. ஊடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த இவர், பஸில் ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய நபராவார்.
” இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் – குறைந்தபட்ட பொது இணக்கப்பாட்டுடன் புதிய அமைச்சரவையுடன் அவசர அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காசாவில் மட்டுமல்ல இந்த பூமியில் இருந்தே ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இஸ்ரேல் அரசு தனித்துவிடப்படவில்லை, எதிரணியும் உடன் உள்ளது என்ற செய்தி இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசின்கீழ் தான் தேசிய பிரச்சினைக்கு இஸ்ரேல் முகம்கொடுக்கின்றது.” – எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.
” இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை, இந்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி பதவியைதவிர அமைச்சரவையில் பிரதமர் உள்ளிட்ட ஏனைய பதவிகளை ஏற்று – குறுகிய காலத்துக்கு பொது இணக்கப்பாட்டு அரசை அமைக்க முன்வருமாறும் கோரினார். வாய்மூலம் மட்டுமல்ல எழுத்துமூலமும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
ஆனால் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.” என சுட்டிக்காட்டி, எதிரணிகளின் செயற்பாட்டை கடுமையாக சாடினார்.
” தேசிய பிரச்சினையொன்று ஏற்பட்டவேளை அரசியல் தியாகங்களுக்கு மத்தியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை மேற்படி தரப்புகள் நிராகரித்தமை பாரதூரமான விடயமாகும். ஹமாஸ் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தும்வரை மொசாட் அமைப்பு தூங்கிக்கொண்டு இருந்ததா, ஜனாதிபதி பதவியை துறக்கவும், எங்கள் ஆட்சியில் செய்கின்றோம் என இஸ்ரேல் நாட்டு எதிரணிகள் கூறினவா? ஆனால் எமது நாட்டு கட்சிகள் அவ்வாறு கோரின. எனவே, இது தொடர்பில் எமது நாட்டு மக்கள் சந்திக்க வேண்டும். தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினையின்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” -எனவும் விரிவானதொரு பாடத்தை ஊடக சந்திப்பின்போது அவர் எடுத்தார்.
