மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
அத்துடன், பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான நில உரிமையும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 20 கிலோ கொழுந்து எடுத்தால்தான் 800 முதல் 900 ரூபாவரை வழங்கப்படுகின்றது. அதற்கு குறைவாக எடுத்தால் 500 ரூபாவே வழங்கப்படுகின்றது. 20 கிலோவுக்கு மேல் எடுத்தால் மேலதிக ஒரு கிலோவுக்கு 50 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால் சிறுதோட்ட உரிமையாளர்களிடம் இருந்து ஒரு கிலோ 150 ரூபாவுக்கு வாங்கப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினையே பிரதான பிரச்சினை அது தீர்க்கப்பட வேண்டும்.
அம்மக்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகள் வழங்கப்பட வேண்டும். அப்போது ஒரு கிலோவை 150 ரூபாவுக்கு விற்பனை செய்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சொந்த காலில் நிற்ககூடிய சூழ்நிலை உருவாகும். ” – என்றார் .










