கொவிட் – 19 தொடர்பில் சுகாதார அமைச்சால் வெளியிடப்படும் தரவுகள் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
” கொரோனா வைரஸ் குறித்து ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்ப் பிரிவும் பரிசோதனைகளை நடத்திவந்த நிலையில், அங்கு உரிய முறையில் பரிசோதனை நடைபெறுவதில்லை என குறிப்பிட்டு, அந்த விசாரணைப் பிரிவை,, சுகாதார அமைச்சு நீக்கியது.
இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரவியபோது கடந்த ஏப்ரல் மாதம் எனக்கும், மைத்திரிக்கும் குறித்த பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவே, கொரோனா பரவியுள்ளதா என பரிசோதனை நடத்தியது. முடிவு வெளியானதும், எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது. அவர்களின் பரிசோதனை பிழையெனில் எனக்கு நோய் ஏற்பட்டிருக்கவேண்டும்.
குறிப்பாக ஜிந்துபிட்டியவில் இருந்து ஒருவர் அழைத்துவரப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என பல்கலைக்கழகத்தின் பரிசோதனை பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு இல்லை. அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பதிவிடுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழகம் உடன்படிவில்லை.
நான் கூறும் இந்த விடயம் தவறெனில் உரிய விளக்கத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றேன். எண்ணிக்கையை குறைத்துக்காட்டுமாறு வலியுறுத்தப்பட்டதாக பல்கலைககழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.
உலகில் ஏனைய நாடுகள் பரிசோதனைகளை அதிகரித்துவருகின்றன. ஆனால், இங்கு இருந்த விசாரணைப்பிரிவையும் அகற்றியுள்ளனர். எனவே, சுகாதார அமைச்சு என்ன செய்கின்றது என்ற வினா எழுகின்றது. குறித்த அமைச்சால் வழங்கப்படும் தரவுகள் சரியானவையா என்பதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தரவுகளை ஏற்கமுடியுமா? இன்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த அச்சநிலையை மட்டுமே மொட்டு அரசால் உருவாக்கமுடிந்தது.” – என்றார்.