” கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த வருடம் முற்பகுதியில் 3ஆவது அலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வாழ்வதற்கு அனைவரும் பழகிக்கொள்வோம்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளரும், விசேட வைத்தியருமான ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்னும் 2 வருடங்களுக்கு மேலாவது கொரோனா வைரசுடன்தான் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அனைவரும் சுகாதார பழக்கவழக்கங்களை முழுமையாக பின்பற்றி நாளாந்த வாழ்க்கையை முன்னெடுத்துசெல்லவேண்டும்.
அத்துடன், கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில் குறித்த வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிடின், அடுத்த வருடம் முற்பகுதியில் மூன்றாவது அலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பும், கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை நடத்தும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள வைரஸைக்காட்டிலும் அது பயங்கரமாக இருக்கக்கூடும். எந்தெந்த வயது தரப்பினரை அது தாக்கும், எப்படியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தற்போது எம்மால் ஊகிக்கமுடியாது.
கொரோனா வைரஸ் என்பது எமது வாழ்வுக்கு எப்படியும் சவாலாக அமையும். அது எம்மை தொற்றாதவகையில் நாம் செயற்படவேண்டும். அதற்கு விசேட மந்திரம் எதுவும் இல்லை. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைககளை கழுவுதல், சமூகஇடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைதான் முழுமையாக பின்பற்றவேண்டும். ” – என்றார்.