” மலையகத்தில் தேசிய பொங்கல் விழாவை நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எவ்வித அருகதையும் கிடையாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. இப் பொருளாதார நெருக்கடியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெருத்தோட்ட தொழிலாளர்கள் ஆகும்.
விலைவாசிகளின் அதிகரிப்பு, வாழ்க்கை செலவின் உயர்வு அவர்களை செய்வதறியாத நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றது. சம்பள உயர்வுக்கான எவ்வித அறிகுறியும் தென்படுவதாக இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் மலையகத்தில் தேசிய பொங்கல் விழா நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அருகதை இல்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூலி, இறுதியாக இரண்டாயிரத்து இருபத்தோராம் (2021) ஆண்டில் நாளொன்றுக்கு ரூபா ஆயிரம் என தீர்மானிக்கப்பட்டது. தற்போது முடிவடைந்த காலத்தில் விலைவாசிகள் மும்மடங்காக அதிகரித்து இருக்கின்றது. இவ்வருடம் அரசாங்கம் கொண்டுவந்த வெட் வரியுடன் எஞ்சியிருத்த பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளது.
கோதுமை மா ஒரு கிலோ கிராம் ரூபா 100 க்கு விற்கப்பட்டது, இன்று 320 ரூபாவாக உள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் ரூபா 87 க்கு இருந்தது இன்று ரூபா 240 ஆக உள்ளது. தை திருநாள் வருகின்றதென தெரிந்திருந்தும் நேற்றுவரை ஒரு லீட்டர் பால் 160 ரூபாவுக்கு விற்கப்பட்டது இன்று ரூபா 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளரின் நாட்கூலி அன்றிருத்த அதே ரூபா ஆயிரமாக உள்ளது.
இன்றுள்ள விலைவாசியில் பொங்கலொன்றை வைப்பதற்கு குறைந்தபட்சம் ரூபா 3000 க்கு மேல் தேவை. அதாவது ஒரு தொழிலாளர் மூன்று நாட்களுக்கு மேல் வேலை செய்து பெறுகின்ற கூலியாகும். இச்சூழலில் தாய்மார்களின் வயிறு பற்றி எரிந்துகொண்டு இருக்கின்றது.
ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் விறகு வைத்து, தீ மூட்டி பொங்கல் பொங்க தேவையில்லை. தாய்மார்களின் வயிற்றில் இருந்து பற்றி எரியும் நெருப்பிலேயே பொங்கல் பொங்கி விடலாம். மக்கள் இவ்வாறு திண்டாடும் போது, கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வெட்கம் இல்லையா என தான் கேட்க வேண்டியுள்ளது. எங்கள் மக்களுக்கு உண்மையான பொங்கல் பிறப்பது சம்பளம் அதிகரிக்கும் நாளிலேயே. கொண்டாட்டத்தை விட்டு சம்பள அதிகரிப்புக்கு வழிசெய்யுங்கள்.” – என்றார்.










