நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தவறான வழியில் மிகவும் கொடூரமாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே, நவீன யுகத்துக்கேற்ற வகையிலான புதிய சட்டமொன்றே அவசியம். ஆனால் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் அடக்குமுறையை இலக்காகக்கொண்டது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டை மீட்கக்கூடிய நடைமுறைக்கு சாத்தியமான பொதுவான வேலைத்திட்டம் அவசியம், அந்த வேலைத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டே கூட்டணி உருவாக்கப்படும். அதற்கான முயற்சியில் நாம் ஈடுபடுகின்றோம். ஜனாதிபதி வேட்பாளர்களின் வேலைத்திட்டம் பற்றி ஆராய்வோம். தகுதியான ஒருவரை முன்னிறுத்துவோம்.
பொருளாதாரத்தை முன்னேற்றத்துக்கு டிஜிட்டல் சேவையும் முக்கிய இடத்தை வகிக்கின்றது, அதற்கான மரண அடியே நிகழ்நிலைக் காப்பு சட்டமாகும். இது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். இதன் பிரதிபலன் ஆட்சியாளர்களுக்கு அடுத்த தேர்தலில் கிடைக்கப்பெறும்.
நாட்டில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பழமையானது, அது தவறான முறையில் மிகவும் கொடூரமான முறையில் பயன்படுத்தப்பட்டும் உள்ளது. எம்மையும் அச்சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இன்று தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளுக்கு பதிலாக ட்ரோனர்களில் தாக்குல் நடத்தப்படுகின்றது. எனவே, இவற்றை எதிர்கொள்ளக்கூடிய நவீன யுகத்துக்கு ஏற்றவகையிலான புதிய சட்டம் அவசியம். ஆனால் அரசுக்கு எதிரான தொழிற்சங்க வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மக்களை ஒடுக்கும் வகையிலேயே இந்த ஆட்சியின்கீழ் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.” – என்றார்.
