9 ஆவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தையும் முன்வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்கை விளக்க உரையின்போது மகாகவி பாரதியாரின் கவிதையொன்றையும் கோடிட்டிகாட்டி உரையாற்றினார்.
ஜனாதிபதி இது தொடர்பில் கூறியதாவது,
“ 19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன
” முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்”
அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்?
மீண்டும் – மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஒளியாவோம். இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.
நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.
நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?
மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்புச் செயற்பாடுகளின் அனுர குமார திசாநாயக்க எம்.பி முன்னோடியாகச் செயற்பட்டார். ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயரையும் அவரே பரிந்துரை செய்தார். அந்த அலுவலகத்தின் ஆவணங்கள் இன்றும் அனுரகுமார திசாநாயக்க எம்.பியிடம் உள்ளன. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்?
இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.
நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.
அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஒளியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம்.
வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்….!” – என்றார்.