மோதல் சம்பவம் – 13 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தல் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 13 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் சரீர பிணையில் செல்ல பலாங்கொடை மேலதிக நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி வழங்கினார்.

கடந்த 9 ஆம் திகதி இரவு சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் எழுவர் கைது செய்யப்பட்டதுடன் , ஏனைய 6 மாணவர்களும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

மேற்குறிப்பிடப்பட்ட 13 மாணவர்களையும் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, இவர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் இன்றைய தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட 13 மாணவர்களையும் மீண்டும் நாளைய தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles