தலைமன்னார் – ராமேஸ்வரம் தொடர்பு குறித்து இந்திய தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மக்களுக்கு நாங்கள் செய்த உதவிகள் சமுதாய நோக்கத்து டன் முன்னெடுக்கப்பட்டவை. இதே போன்றே மீனவ சமூகம் முக்கியத்துவம் பெறுகின்றது என இலங்கைக்கான இந்திய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர் சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அவரது துணைவியார் மற்றும் யாழ்ப் பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கருத்துத் தெரிவிக்கை யிலேயே தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – மன்னார் மாவட்டத்தின் எனது முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.இங்கு என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, என்ன தேவைகள் உள்ளன என்பதை அறிந்துள்ளேன். 2010 இல் இருந்து இங்கு அமுல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களையும் என்னால் நினைவு கூர முடிகிறது.

இலங்கை மக்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவி செய்துள்ளோம், அவை சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டவை, அதே போன்றே மீனவ சமூகமும் முக்கியத்துவம் பெறுகின்றது. மன்னாரிற்கு அதிகம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றமையைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தரும் மக்களினால் இங்கு ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளைப் பார்க்க முடிகிறது.

அரச அதிபர் கூறியது போல் தலை மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்கு தேவையான விடயங்களை அங்கு முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக மீனவ சமூகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு. தொழில்நுட்ப மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டியவை தொடர்பாக வும் ஆராய்ந்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில்நுட்பக் குழு ஒன்று வருகை தந்திருந்தது. இங்கு இறால் மற்றும் நண்டு வளர்ப்பது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான உட்கட்டமைப்பு என்பவை தொடர்பாகவும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று வேறு பல வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். – என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles