ஜனாதிபதி பதவியைவிட சம்பந்தன் கூறிய அந்த வார்த்தையே போதும் – டலஸ் உருக்கம்

“ நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நான் தோல்வி அடைந்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னை பற்றி கூறிய அந்த வார்த்தையே போதும். தேர்தலை வெற்றியைவிடவும் அது வலிமையானது.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பின்போது எனக்கு 86 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அதில் இரு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் உள்ள சிரேஷ்ட தலைவர்தான் இரா. சம்பந்தன். வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் 19 ஆம் திகதி இரவு அவரின் வீட்டில் கூடினோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் முக்கிய விடயமொன்றை குறிப்பிட்டார்.

இதன்போது சஜித் பிரேமதாசவும் இருந்தார். டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம், அதற்கு இரு காரணங்கள் உள்ளன என்று சம்பந்தன் கூறினார். ஒன்று டலஸ் இனவாதி அல்லன், 2ஆவது ஊழல், மோசடி அற்ற அரசியல்வாதி என அவர் காரணங்களை கூறினார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள தலைவர்களுக்கு வாக்களிப்பதற்கு தீர்மானித்த முதல் சந்தர்ப்பம் அது. ஜனாதிபதி பதவியைவிட எனக்கு இது பெறுமதியானது.

அரசியலுக்கு வருவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான் நான் வெளிநாடு சென்றேன். எனினும், போரை முடிப்பதற்கு உங்களின் ஆதரவு தேவை என மஹிந்த ராஜபக்ச சொன்னார். அப்போது அவர் பிரதமராக இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் இதனை எதிர்த்தனர். இருந்தும் நான் வந்தேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles