நாடு கோரிய முறைமை மாற்றத்தை செய்யக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” ஜனாதிபதி தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்படும் என்றும் பொதுத் தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அதற்காகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த நாட்டில் தேசிய தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் தேர்தலை நடத்துவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனால் தான் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடவில்லை.
அடுத்த தேர்தலில் கட்சி என்ற ரீதியில் நாங்கள் யாருக்கும் ஆதரவு என்பது குறித்து இன்னும் தீர்மானம் இல்லை. ஆனால் எம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. அதன்படி நாம் செயல்பட முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்கு பெயர் குறிப்பிடும் போது வேட்பாளர்களைப் பார்த்து யாருக்கு உதவுவோம் என்று சொல்ல முடியும். எனது கருத்தை தெளிவாக கூறியுள்ளேன். இந்த நேரத்தில் நாட்டுக்கு தேவை இந்த பொருளாதாரத்தை மீட்பதே.
அதே போல் இந்த நாட்டில் 72 ஆண்டு கால சாபம் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அல்ல, மாறாக இந்த அமைப்பின் தவறுகள். அதனால்தான் அமைப்பை மாற்றச் சொன்னார்கள்.
ரணில் விக்கிரமசிங்க அதைச் செய்யக்கூடிய தலைவர் என்பதாலேயே, அதை இதுவரையில் செய்து காட்டியவர் என்பதாலேயே இதைச் சொல்கிறோம். அவர் கேட்பாரா இல்லையா என்று தெரியவில்லை. கேட்பார் என்றால் அவர்தான் இதற்குத் தகுதியானவர் என்று சொல்கிறேன்.” – என்றும் அமைச்சர் கூறினார்.
