“ மலையகத்துக்கான இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“ தோட்ட மக்களுக்கு அன்று ஆரம்பிக்கப்பட்ட ஏழு பேர்ச் காணியில் தான் வீடுகள் கட்டப்பட்டன. அந்த வகையில் இப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதேயளவு காணிகளிலேயே வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் முக்கியம். மலையகப் பெருந்தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது எனினும் அதில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் மூலம் வழங்கப்படும் 15,000 ரூபா தோட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.










