ஆடி வேல் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்களின் 152 ஆவது வருடாந்த வேல் திருவிழா ஊர்வலம் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளி ரத ஊர்வலம் ஜூலை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு புறக்கோட்டை செட்டித் தெருவில் (Sea Street) உள்ள கதிரேசன் கோவிலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊர்வலம் செட்டித் தெரு, ஐந்து லாம்பு சந்தி (Gas Works Junction), பிரதான வீதி (Main Street), கான் கடிகாரக் கோபுரம் (Khan Clock Tower), YMBA சந்திப்பு, பாஸ்டியன் வீதி (Leyden Bastian Road), யோர்க் வீதி (York Street), பாரன் ஜெயதிலக மாவத்தை (Baron Jayatilaka Mawatha), ஜனாதிபதி மாவத்தை (Janadhipathi Mawatha), காலி முகத்திடல் (Galle Face), காலி வீதி (Galle Road) வழியாக பம்பலப்பிட்டியை சென்றடையும்.

பொலிஸாரின் கூற்றுப்படி, மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி வழியாக காலி வீதியில் ஊர்வலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இரவு 7.00 மணியளவில் பழைய கதிரேசன் கோவிலையும், இரவு 8.30 மணியளவில் புதிய கதிரேசன் கோவிலையும் சென்றடையும்.

மீளத் திரும்பும் ஊர்வலம் ஜூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இருந்து தொடங்கி, புறக்கோட்டை செட்டித் தெருவில் உள்ள கதிரேசன் கோவிலை நோக்கி நகரும். இது நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலப்பகுதியில் ஊர்வலம் செல்லும் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாத்தியமான இடங்களில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles