பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை துரிதம்

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், வழக்கு விசாரணைகளோ அல்லது முறையான குற்றச்சாட்டுகளோ இன்றித் தற்போது தடுப்பில் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

15 வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதியொருவருக்கு நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கிய விவகாரத்தை சுட்டிக்காட்டியே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீதி அமைச்சர்:

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை பெற முடியும். அந்த நடைமுறையை நாடுவதற்கு அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை. தற்போது நீதிமன்றம் சுயாதீனமாகச் செயல்படுகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நேரடியாகத் தீர்மானம் எடுக்க முடியாது.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles