“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமாகும். ஜனநாயக நாடொன்றில் மக்கள் வழங்கிய பதவிகாலம் நிறைவடையும்வரை அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
ஒரு கட்சி அதிகாரத்துக்கு வந்தால், பதவியேற்ற நாள் முதலே அதனை கவிழ்ப்பதற்கு முற்படக்கூடாது. இதுவரைகாலமும் எமது நாட்டின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு தடையாக இருந்தது எனலாம். ஜே.வி.பியே இதனை அதிகம் செய்துள்ளது. இந்நிலைமை மாற வேண்டும்.
இதற்காக அரசாங்கம் செய்யும் தவறுகளையெல்லாம் அனுமதிக்க வேண்டும் என்றில்லை. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்களுக்காக முன்னிலையாகும் வேலையையே நாம் கூட்டு எதிரணியாக செய்துவருகின்றோம். ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவசரம் காட்டவில்லை.” – என்றார்.










