மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்மொழியும் மாடி வீடமைப்புத் திட்டம் மாத்திரம் நிரந்தரத் தீர்வாக அமையாது. மலையக மக்களுக்கு வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரத்திற்கான காணி மற்றும் சிறுதோட்ட உடமையாளர் என்ற உரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படும் வகையில் புதிய காணிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என ஐபென் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீவரட்னம் சுரேஷ் தெரிவித்தார்.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பாக ஊடகவியலாளர்களைத் தெளிவூட்டும் விசேட அமர்வு செப்டெம்பர் 22ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்றது.

ஐபென் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வமர்வு, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக நடத்தப்பட்ட மூன்றாவது ஊடகவியலாளர் தெளிவூட்டும் அமர்வாகும். இதில் சிரேஷ்ட சட்டத்தரணி விஜயகுமார் சுகுமார் வளவாளராகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜீவரட்னம் சுரேஷ், மலையக மக்கள் சுமார் 203 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ள போதிலும், அவர்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“மலையக மக்களின் பிரச்சினை வெறுமனே வீடு இல்லாத பிரச்சினை அல்ல. அவர்கள் வாழும் நிலத்தின் மீதான உரிமை, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் இதனுடன் இணைந்துள்ளன. எனவே, அரசாங்கம் முன்மொழியும் மாடி வீடமைப்புத் திட்டத்தின் மூலம் மாத்திரம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியாது” என அவர் தெரிவித்தார்.

மலையக மக்களுக்கான காணி வழங்கல் கொள்கை, வெறுமனே வீடு அமைப்பதற்கான காணியை வழங்குவதுடன் முடிவடையக் கூடாது. மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான குடியிருப்புக் காணியுடன், குடும்பங்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான வாழ்வாதாரக் காணியும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 5 முதல் 20 ஏக்கர் வரையான வாழ்வாதாரக் காணிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், குடியிருப்புக்காக குறைந்தபட்சமாக 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த மக்களை தொடர்ந்தும் தொழிலாளர் நிலையிலேயே வைத்திருப்பதற்குப் பதிலாக, அவர்களை காணி மற்றும் உற்பத்தி வளங்களின் உரிமையாளர்களாக மாற்றுவதற்கான கொள்கை மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சிறிய அளவிலான காணிகளில் தேயிலை, மரக்கறிகள், பழவகைகள் உள்ளிட்ட விவசாய மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் வருமானத்தையும் பொருளாதார சுயநிலையையும் அதிகரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

காணி உரிமையின் சட்டப் பின்னணி

இதனைத் தொடர்ந்து, நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி விஜயகுமார் சுகுமார், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

மலையக மக்கள் காணி உரிமையைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சட்ட ரீதியான தடைகள், காணி ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள், அரச நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, குத்தகை ஒப்பந்தங்கள், காணி ஆவணங்கள், அரச காணி நிர்வாக நடைமுறைகள் மற்றும் நீண்டகாலமாக காணி உரிமையின்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு சட்ட ரீதியாக உரிமையை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

மலையக மக்களின் காணிப் பிரச்சினை வெறுமனே அரச காணி வழங்கல் தொடர்பான நிர்வாகப் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், அவர்களின் நீண்டகால குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் சமூக உரிமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

காணி உரிமையும் வாழ்வாதாரமும்

காணி உரிமை என்பது ஒரு குடும்பத்திற்கு வீடு அமைப்பதற்கான இடத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் முடிவடையும் விடயம் அல்ல என்றும், அந்தக் காணி குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பிற்கும் எதிர்கால சந்ததியினரின் உரிமைக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

மலையக மக்களை எதிர்காலத்தில் சிறுதோட்ட உடமையாளர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம், அவர்கள் பாரம்பரியமாக தொழிலாளர் வர்க்கத்தில் மட்டும் தங்கியிருக்கும் நிலைமையில் இருந்து பொருளாதார ரீதியாக சுயநிலையை அடையும் வாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஊடகங்களின் பொறுப்பு

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டதுடன், காணி உரிமை தொடர்பான சட்டங்கள், அரச கொள்கைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து மக்களுக்கு தெளிவான தகவல்களை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை உருவாக்குவதற்கு, அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களுடன் சட்டத்துறை, சிவில் சமூக அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இவ்வமர்வில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, மலையக மக்களின் காணி உரிமை குடியிருப்புக் காணி, வாழ்வாதாரக் காணி மற்றும் உற்பத்தி வளங்களின் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்பதுடன், அவர்களை எதிர்காலத்தில் சிறுதோட்ட உடமையாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் நீண்டகாலக் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியமும் எடுத்துக்காட்டப்பட்டது.

203 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்து வரும் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினை இனியும் தற்காலிகத் திட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல், சட்டபூர்வமான காணி உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சுயநிலை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நிலையான தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பதே இவ்வமர்வின் முக்கிய வலியுறுத்தலாக அமைந்தது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles