எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த அசாத்திய வெற்றியின் மூலம் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், அர்ஜென்டினா கால் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
அட்லாண்டாவில் நடைபெற்ற இப்போட்டியில் எகிப்து அணியின் யாசர் இப்ராஹிம் மற்றும் முஸ்தபா ஜிகோ ஆகியோர் அடித்த கோல்களால், அர்ஜென்டினா போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மெஸ்ஸி அடித்த பெனால்டி வாய்ப்பையும் எகிப்து கோல்கீப்பர் தடுத்ததால், எகிப்து ஒரு வரலாற்று வெற்றியை நோக்கி நகர்ந்தது.
இருப்பினும், கிறிஸ்டியன் ரொமேரோவின் கோல் அர்ஜென்டினாவின் பதிலடிக்குக் காரணியாக அமைந்தது. ஆட்டத்தின் கடைசி 11 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேரத்தில் (injury time) அர்ஜென்டினா அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து அசத்தியது.
மெஸ்ஸி ஆட்டத்தைச் சமன் செய்ய ஒரு மிரட்டலான கோலை அடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 9 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், இந்தத் தொடரில் தனது 8-வது கோலைப் பதிவு செய்து ‘கோல்டன் பூட்’ (Golden Boot) பந்தயத்தில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில், என்ஸோ பெர்னாண்டஸ் ஒரு அற்புதாமான ஹெடர் (Header) கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை முழுமையாக்கினார். ஆட்டம் முடிந்ததும், மெஸ்ஸி ஆனந்தக் கண்ணீருடன் தனது சக வீரர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடினார்.
மறுபுறம், தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளால் எகிப்து அணி கடும் அதிருப்தி அடைந்தது. குறிப்பாக இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அவர்கள் அடித்த கோல் ஒன்று மறுக்கப்பட்டது. மேலும், அர்ஜென்டினாவின் வெற்றி கோலுக்குப் பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தில் எகிப்து அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு சிவப்பு அட்டை (Red card) காண்பிக்கப்பட்டது.
