எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உர விநியோகச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில், 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்புத் திட்டத்தை பெடரல் அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஒரு பில்லியன் லிட்டர் எரிபொருளை அரசாங்கமே கையிருப்பில் வைப்பதற்கான ‘தேசிய எரிபொருள் சேமிப்பு மையம்’ உருவாக்கப்பட உள்ளது.
சுமார் $3.2 பில்லியன் செலவில், அரசுக்குச் சொந்தமான ஒரு பிரம்மாண்ட எரிபொருள் இருப்பு மையம் அமைக்கப்படும். இதில் 1 பில்லியன் லிட்டர் டீசல் மற்றும் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்படும்.
தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்களது குறைந்தபட்ச கையிருப்பு அளவை மேலும் 10 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா எப்போதும் குறைந்தது 50 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைக் கையிருப்பில் வைத்திருப்பது உறுதி செய்யப்படும்.
எரிபொருள் மற்றும் உர விநியோகத்தை மேம்படுத்த, கடன்கள் மற்றும் உத்தரவாதங்கள் மூலம் $7.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்:
“ஆஸ்திரேலியாவின் எரிபொருள் இறையாண்மையைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
தற்போதைய நெருக்கடி காலங்களில் மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் நாட்டின் எரிபொருள் நலன்களைக் காக்க இது மிக அவசியமானது,” என்று தெரிவித்தார்.
எரிசக்தித் துறை அமைச்சர் கிறிஸ் போவன் கூறுகையில்,
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) உறுப்பு நாடுகளில் ஆஸ்திரேலியா மட்டுமே அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சேமிப்பு இல்லாமல் இருந்தது என்றும், இனி அந்த நிலை மாறும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஆஸ்திரேலியாவிடம்:
பெட்ரோல்: 43 நாட்களுக்குத் தேவையான இருப்பு.
டீசல்: 33 நாட்களுக்குத் தேவையான இருப்பு.
விமான எரிபொருள்: 28 நாட்களுக்குத் தேவையான இருப்பு மட்டுமே உள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை “மிகத் தாமதமானது” என எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் விமர்சித்துள்ளார்.
குறைந்தபட்ச எரிபொருள் இருப்பு அளவை 50 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும், அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
