பதுளை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் நிரோஷன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அதிபர் நிரோஷன் ,
“மாணவர்களின் அயராத முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதலே இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாகும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்திலும் மாணவர்கள் இது போன்ற சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத் திகழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வு சாதனை படைத்த மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததுடன், இனிவரும் காலங்களில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
R.T. பசறை
