ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 ‘கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்’ (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
நாட்டில் பறவைகள் முதன்முறையாக இவ்வாறு பெருமளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்நோய் மேலும் பரவக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஜூன் மாதம் இந்நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது முதல் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியப் பண்ணைகளில், இந்த வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.
அடிலெய்டில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ‘கேப் ஜாஃபா’ (Cape Jaffa) பகுதியில் உள்ள பாறைகளில், ஹெலிகாப்டர் கண்காணிப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 49 இறந்த பறவைகள் மற்றும் 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளைப் பரிசோதித்ததில் H5N1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கான்பெராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஆஸ்திரேலியர்கள் இனி வனவிலங்குகள் மற்றும் பறவைகளிடையே இந்த நோய் மேலும் பரவுவதையும், அதிக அளவிலான இழப்புகளையும் பார்க்கக்கூடும். வனவிலங்குகளிடையேயும் இயற்கை சூழலிலும் இந்த H5N1 நோய் பரவத் தொடங்கிவிட்டால், பெரிய அளவிலான இழப்புகளைத் தவிர்க்க முடியாது. அதைத்தான் நாம் இப்போது பார்க்கத் தொடங்கியிருக்கிறோம்” என்று கூறினார்.
H5N1 பறவைக் காய்ச்சலானது, பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கும் பரவக்கூடும். இருப்பினும், உலகளவில் மனிதர்களுக்குப் பரவிய வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதுடன், மனிதர்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து குறைவு என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.










