ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பொதுச்செயலாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று புதிய ஆட்சி அமையப்பெற்ற பின்னர் இடைக்கால கணக்கறிக்கையே முன்வைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்காக பட்ஜட் சமர்ப்பிக்கப்படாது. ஏனெனில் அவ்வாண்டு முடிவடைவதற்கு குறுகிய காலப்பகுதியே உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும்.
நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தவதே எமது இலக்கு. அதனை அடிப்படையாகக்கொண்டு அடுத்த நான்கு வருடங்களுக்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.